Followers

Thursday 26 July 2018

பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்-திருபட்டூர்

Bramman at Tirupattoor

திருச்சியில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது திரூபட்டூர் .சமயபுரம் சென்னை தேசீய நெடுஞ்சாலையில் இருந்து விலக்கு பாதையில் சென்றால் திருபட்டூர் சென்றடையலாம் . பிரம்மபுரீஸ்வரர் கோவில் ஒருவரது தலைஎழுத்தை மாற்றும் கோவில் என்று சொல்லபடுகிறது. மேலும் தலையில் எழுதியிருந்தால் மட்டுமே ஒருவர் இந்த கோவிலுக்கு செல்ல முடியும் என்று நம்பபடுகிறது .பிரம்மனுக்கு அருள் புரிந்த ஈசன் தான் பிரம்மபுரீஸ்வரர். பிரம்மபுரீஸ்வரர் ஒரு சுயம்பு மூர்த்தி. கிழக்கு நோக்கிய மூலவர் போலவே வெளி பிரகாரத்தில்  தெற்க்கு பக்கத்தில் கிழக்கு நோக்கி பிரம்மன் சன்னதி உள்ளது.திருபட்டூரில் மட்டுமே பிரம்மன் தனி சன்னதியுடன் காணபடுகிறார். திருபட்டூரில் உள்ள பிரம்மன் தலை எழுத்தை மாற்றும் சக்தி உடையவர்.படைப்பாற்றல் உள்ள பிரம்மன் ஒரு முறை தனக்கும் ஐந்து தலை ஈசனுக்கும் ஐந்து தலை என்று அகங்காரத்தில் இருந்தார்.அதனால் ஈசனை மதிக்காமல் இருந்தார்.ஈசன் பிரம்மனுடைய அகங்காரத்தை அழிக்க நினைத்து ஐந்து தலைகளில் ஒரு தலையை கொய்து விடுகிறார் .இதனால் பிரம்மன் படைப்பாற்றலை இழக்கிறார்.ஈசனின் சாப விமோசனம் வேண்டி பிரம்மன் திருபட்டூரில் 12 சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து ஈசனை வேண்டுகிறார்.மகிழ்ந்த ஈசன் பிரம்மனுக்கு மீண்டும் படைப்பாற்றலை வழங்குகிறார்.மேலும் ஈசன் இங்கு வந்து பிரம்மனை வணங்குபவர்களுக்கு அவர்களது தலை எழுத்தை மாற்றி மங்களகரகமாக்கும் ஆற்றலை வழங்குகிறார்.திருபட்டூரில் உள்ள பிரம்மனின் பார்வை பட்டாலே போதும் சகல தோஷங்களும் விலகி நல்வாழ்வு அமையும்.ஆனால் விதி இருப்பவர்கள் மட்டுமே இந்த தலத்திற்கு வர முடியும் என்றும் நம்பபடுகிறது .இந்த கோவிலில் முதலில் ஈசன்,பின்பு பிரம்மன்,அம்பாள் என்று வணங்கிவிட்டு 36 நெய் தீபங்கள் ஏற்றி 9 முறை ஆலயத்தை வலம் வந்தால் சகல வித தோஷங்களும் விலகி விடும் என்று நம்பபடுகிறது. ஏழாம் எண்  ஆதிக்கத்தில் பிறந்தவர்களும் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பாதிக்கப்பட்டவர்களும் இந்த கோவிலில் வழிபட்டால் விசேஷ பலன்கள் உண்டாகும் என்று நம்பபடுகிறது .

 கொடிமரத்தின் அருகில் உள்ள நந்திக்கு மேல் ருத்திராட்சத்தினால் ஆன பந்தல் உள்ளது.ஈசன்  அம்பாளுடன் காட்சி தந்து பிரம்மனுக்கு இழந்த சம்பத்தை மீட்டு கொடுத்ததினால் அம்பாளுக்கு  பிரம்ம சம்பத் கௌரி என்று பெயர்.மங்கள நாயகி என்று அம்பாளுக்கு மற்றொரு பெயரும் உண்டு .பிரம்மன் இங்கு தாமரை மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.பிரம்மனுக்கு இங்கு எப்பொழுதும் மஞ்சள் அலங்காரம் மட்டுமே செய்கிறார்கள்.பிரம்மன் வணங்கிய 12 லிங்கங்களில் பிரம்மபுரீஸ்வரர் தான் மூலவர் . இன்னும் 3 லிங்கங்கள் மூலவரின் வெளி  பிராகரத்தில் உள்ளது .அவை பழமலை நாதர் ,பாதாள லிங்கம் ( பாதாளத்தில் உள்ளது ) மற்றும் சுத்ததாநேஸ்வரர்.ஐந்தாவது லிங்கம் தாயுமானவர் ,அம்பாள் சன்னதிக்கு வெளியில் உள்ளது .அம்பாள் சன்னதிக்கு பக்கத்தில் வெளியில் பிரிந்தாவனம் போல ஒரு இடம் உள்ளது அங்கு தான் மீதம் உள்ள ஏழு லிங்கங்கள் உள்ளது.அவை மண்டூக நாதர் ஏகாம்பரேஸ்வரர் அருணாச்சலேஸ்வரர்,ஜம்புகேஸ்வர,காளத்தி நாதர், சப்த்ரிஷீஸ்வர்ர் என்பதாகும் .இங்கு தான் பிரம்ம தீர்த்தம் உள்ளது .நாங்கள் பார்க்கும் பொழுது அதில் தண்ணீர் இல்லை.இது தவிர இங்கு முருகன் வழிபட்ட ஈசன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் உள்ளார்.முருகன் அசுரர்களை அழிக்க செல்லும் முன் இங்கு லிங்க ப்ரிதஷ்டை செய்து ஈசனை வழிபட்டு படை திரட்டி சென்றதாக வரலாறு.இதனால் திருபடையூர் என்ற பெயர் பின்பு மருவி திருபட்டூர்  ஆனது .

 இந்த கோவிலின் மற்ற சிறப்புகளில் ஓன்று பங்குனி மாதம் 3 நாட்களில் சூரிய ஒளி சரியாக ஏழு நிமிடத்திற்கு சிவ லிங்கம் மேல் விழுகிறது .வியாழ கிழமைகள் பௌர்ணமி நாட்கள் மற்றும் சதய நட்சத்திர தினங்களில் இங்கு மக்கள் அதிக அளவில் வருகிறார்கள். திருபட்டூரின் இன்னொரு சிறப்பு பதஞ்சலி முனிவர் வியாகரபாதர் என்ற இரு முனிவர்களின் ஜீவா சமாதி உள்ளது தான்.ஈசன் அனந்த தாண்டவம் ஆடும் பொழுது நந்தியின் இரு கொம்புகளுக்கு மத்தியில் அதை காணும் பாக்கியம் படைத்தவர்கள் தான் இந்த இரு சித்தர்களும்.பதஞ்சலி முனிவரின் ஜீவா சமாதி கோவிலின் உள்ளே பிரம்மன் சன்னதி அருகே உள்ளது.ஒரு கண்ணாடி பேழைக்குள் பதஞ்சலி முனிவரின் ஜீவ சமாதி உள்ளது.இங்கு அமர்ந்து தியானம்  செய்கிறார்கள்.வியாகரபாதரின் சமாதி கோவிலுக்கு அருகில் அரை கி.மீ தொலைவில் உள்ளது .திருபட்டூர் வருபவர்கள் இந்த சமாதிக்கும் சென்று வருகிறார்கள்.கண்டிப்பாக தரிசனம் செய்ய வேண்டிய திருத்தலம் திருபட்டூர் . விதி இருந்தால் சென்று தரிசனம் செய்து உங்கள் தலை எழுத்தை மாற்றும் படி ஈசனிடமும் பிரம்மனிடமும் வேண்டி பயன் அடையுங்கள் .

No comments:

Post a Comment