Followers

Monday 30 July 2018

1.ஞானம் என்றால் என்ன?
ஞானி என்போர் யார்?

பரிபூரண அறிவே ஞானம். பூரணம் என்றால் முழுமை. முற்றும் அறிந்தவனே – உணர்ந்தவனே பரிபூரணன். ஞானி.சந்தேகமின்றி – தெளிந்தவனே எல்லாம் தெரிந்தவன் ஆவான். அவனே எல்லோருக்கும் தெரிவிப்பான். அவன் தான் ஞானி.இரக்கமே உருவானவன். கருணையே வடிவானவன். எவ்வுயிரையும் தம்முயிர் என கருதுபவன். அவனே ஞானி.

எல்லாம் வல்ல , எங்கும் நிறைந்த ஆதியும் – அந்தமில்லா, கருணை மழையான , வள்ளலான இறைவனை அறிந்தவர்கள் – உணர்ந்தவர்கள் ஞானிகள் ஆவர்.  எல்லாம் வல்ல அந்த இறைவனின் அம்சமே தன் உயிர் என்றும் அந்த உயிர் ஒளியே கண்களில் ஒளியாக துலங்குகிறது என்பதை அறிந்து, உணர்த்து தெளிந்தவன் ஞானி ஆவான்.வள்ளல் யார்? இறைவன் தான்? இவ்வுண்மையை அறிந்தவன் உணருகிறான். உணர்ந்தவன் ஞானி ஆகிறான். ஞானி ஆனவன் “தான் அதுவாகவே” மாறுகிறான். தான் ஆகிய ஆத்மா அதுவாகிய பரமாத்மாவின் இயல்பை பெற்று விடுகிறது.

2. நம் உடலில் உயிர் எங்கு உள்ளது?

“எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்“. நம் உயிர் நம் தலையின் நடுவில் அதாவது , நம் தலை உச்சிக்கு கீழ் நம் உண்ணாவுக்கு மேல் நம் இருகண்ணும் உள்ளே சேரும் இடத்தில் இருக்கிறது. அது துலங்குவது இரு கண்களில்.நமது சிரசில் உச்சியில் இருந்து ஒரு நாடி கீழே இறங்குகிறது. அது நமது கண் காது மூக்கு உள்ளே சேரும் மத்தியில், வாயில் உள் உண்ணாக்குவின் சற்று மேல் வந்து நிலைகொண்டு , அங்கிருந்து இரு நாடியாக பிரிந்து இரு கண்களில் வந்து சேர்கிறது. இவ்விடத்தை லலாடஸ்தானம் , ஆன்ம ஸ்தானம், பத்தாம் வாசல், கடை கண் என்று சித்தர்கள் கூறுவர்.

“உச்சிக்கு கீழ் உண்ணாவுக்கு மேல் அணையா விளக்கு நிதம் எரியுதடி” – சித்தர் பாடல்.

3. மெய்பொருள், திருவடி என்பது என்ன?

இறைவன் திருவடியை பற்றி பாடாத ஞானிகளே இல்லை.”நின் திருவடியை மறவாத மனமே வேண்டும்” என்றும் எல்லா மகான்களும் ஆண்டவனை வேண்டினர். ஜோதி வடிவான இறைவனின் திருவடி எது? எங்கும் நிறைந்த இறைவன் நம் உயிருக்கு ஒளியாக – ஒளிக்கு ஒளியாய் உள்ளான்.மேலும் நம் கண்களில் ஒளியாக துலங்குகிறான்.

நம்மை அறிய , இறைவனை உணர திருவடியையே பற்ற வேண்டும். நாம் இறைவனை தேடி அலைய கூடாது என்பதற்காக நம் கண்ணிற்கு எட்டிய தூரத்திலே கண்ணிலே இறைவன் ஒளியாக துலங்குகிறான்.இந்த ஜீவ ஒளியை தாங்குவதால் நம் கண்களே இறைவன் திருவடி. மெய்யான பொருளை கொண்டு உள்ளதால் கண்களே மெய்பொருள்.

4. எட்டு (8), இரண்டு (2) எதை குறிக்கிறது?

நமது வலது கண் 8 என்றும், இடது கண் 2 ஆகவும் குறிப்பிடபடுகிறது.
வலது கண் – அ , இடது கண் – ௨
வலது கண் – சூரியன் , இடது கண் -சந்திரன்.
வலது கண் – சிவம் , இடது கண் – சக்தி
வலது கண் – சக்கரம் , இடது கண் – சங்கு

5. திருவடி தீட்சை என்றால் என்ன?

தீட்சை = தீ + அட்சை. அட்சம் என்றால் கண். அதாவது கண்களில் உள்ள தீயை (ஒளியை) ஞான சற்குரு தன் கண்களின் ஒளியினால் தூண்டுவதே தீட்சை. தீட்சையின் மூலம் தன் கண்ணில் – கண் மணியில் உணர்வு பெறுகிறான் சீடன்.

நம் கண்மணியை கிருஷ்ண மணி என்பர். தகுந்த ஞான சற்குருவின் மூலம் நம் கிருஷ்ண மணியில் உணர்வு பெறுவதே கிருஷ்ண உணர்வு. இந்த உணர்வை பெறுவதே தீட்சை. இதை தான் சித்தர்கள் “தொடாமல் தொடுவது” , “உணர்வால் உணர வைப்பது” என்றனர்.நம் ஸ்துல உடலில் உள்ள சூட்சும சரிரம் தீட்சையின் மூலம் பிறக்கிறது. இதனால் தீட்சை கொடுத்த ஞான சற்குருவே தாய் தந்தை ஆகிறார்.

“மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால் துவிஜனாகி தவம் செய்து முடிவில் இறைவனை அடைகிறான்.

6. தவம் செய்வது எப்படி?

தவம் என்றால் மந்திர ஜபம் அல்ல. தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்பதோ அல்ல. தவம் என்றால் பிரணாயாமமோ அல்ல. தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல.

கண்மூடி செய்யும் எந்த செயலும் தவம் ஆகாது. கண்களை திறந்து தான் “விழி திறந்து” தான் தவம் செய்ய வேண்டும்.

இறைவன் திருவடியில்(நம் கண்ணில்- கண் மணியில் – கண்மணி ஒளியில்) மனதினை நிறுத்துவதே தவமாகும். சும்மா இரு என்பதன் அர்த்தம் இதுவே. அதாவது நம் மனதை திருவடியில் வைத்து இருப்பதே. குரு தீட்சை பெற்று நம் கண்ணில் உணர்வு பெற்று அதை நினைத்து நினைத்து உணர்ந்து உணர்ந்து அதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் திழைத்து திழைத்து சும்மா இருக்க இருக்க நம் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கொட்டும்.

இங்ஙனம் தவம் தொடர்ந்தால் பலவித அனுபவங்கள் நாம் பெறலாம். நமது வள்ளல் பெருமான் ஞான சரியையில் கூறியபடி நாம் இவ்வாறு தவம் செய்தால் பெறலாம் நல்ல வரமே. நம் வினைகள் எல்லாம் எரிந்து விடும். பெறலாம் மரணமில்லா  பெருவாழ்வே. பிறவாப்பெருநிலை. அருட்பெரும் ஜோதி இறைவனோடு அந்த பரமாத்மாவோடு பேரொளியோடு நாமும் ஒளியாகி இணையலாம். பேரின்பம் பெறலாம்.

No comments:

Post a Comment