Followers

Sunday 10 June 2018

Ⓜ *குலம்தழைக்க வரம்தரும் வம்சவிருத்தீஸ்வரர்:* Ⓜ
[வம்சவிருத்திக்கு அருள் பாலிக்கும் ஆலயங்கள்...]
 

திருமணம் இனிதே முடிந்தது. புரிதலில் மகிழ்ந்து, சின்னச் சின்ன ஊடல்களில் நெகிழ்ந்து, காதலை உணர்ந்து வாழ்க்கையும் இனிதே ஆரம்பமாகிவிட்டது. இந்த இனிய ஆரம்பத்தின் சுகமான சாட்சி - அவன் கருவை அவள் தாங்குவதுதானே ?

*‘ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி நீடூழி வாழ்ந்திடுவீர்’* என்று மணமக்களை, பெரியவர்கள் வாழ்த்துவதும் அந்த இறைக் கொடையை வேண்டித்தான்.

கைகள், கால்களின் இயக்கத்தை நம்மால் அறியமுடிகிறது. நம் ஆணைக்கு கட்டுப்பட்டு அவை இயங்குகின்றன. ஆனால் இதயம், நுரையீரல் - இவற்றின் இயக்கத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா ? தானாக அவை இயங்குகின்றன என்றால் அப்படி இயக்குவிப்பவர் யார் ? ஒவ்வாத பொருளை வயிற்றுக்குள் தள்ளினால் அதை மறுக்கவோ அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்தவோ செய்கிறதே, இந்த மாயத்தை நிகழ்த்துபவர் யார் ?

இதேபோலத்தான் கருப்பைக்குள் கரு தங்குவதும், உருக் கொள்வதும். இதுவும் அந்த அற்புத சக்தியின் மாய லீலைதான். தனக்குள் இன்னொரு உயிர் வளர வேண்டும் என்று ஏங்குவது அன்பான ஒரு தாயின் இயல்பு. சிருஷ்டியின் ரகசியம் அப்போதுதானே முழுமை பெறுகிறது! அப்படி அவள் கரு தாங்கிட, அவளுக்குள்ளேயும் அந்த மாயத்தை நிகழ்த்திட, இறைவன் காத்திருக்கிறான் - பெருங்களூரில்.

🅱 *வீட்டில் ஒரு தொட்டில் ஆடிட..*🅱

*‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’* என்றார்கள். அதேபோல் இறையருளும் கூடினால்தான் *‘புத்திரப்பேறு’* என்ற பேரருள் கிடைத்திடும். இல்லற வாழ்க்கையும் அர்த்தம் பொருந்தியதாக அமையும்.

திருமணம் முடிந்து ஆண்டுகள் பல ஆகியும் வீட்டில் ஒரு தொட்டில் ஆடவில்லை என ஏங்கும் தம்பதிகள்தான் எத்தனைபேர்! அவர்களோடு, அவர்களுடைய தாய் தந்தையருக்கும் அதே கவலைதான். தங்கள் குலம் தழைக்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு திருத்தலங்களை வலம் வருகிறார்கள். வாழையடி வாழை போல வம்சம் தழைப்பதுதானே ஒவ்வொரு குடும்பத்துக்கும் குதூகலம் தரும் விஷயம்!

இதற்குத்தான் எத்தனை எத்தனை நேர்த்திக்கடன்கள்! கவலைக் கடலில் மூழ்கியிருப்பவர்களைக் கரைசேர்க்க பெருங்களூர் திருத்தலத்தில் ஈசன் *‘வம்சவிருத்தீசுவரர்’* என்ற திருநாமம்கொண்டு அருள்பாலிக்கிறார். குலம் தழைத்திட, வம்சம் மேலோங்கி வளர்ந்திட அருள்பாலிக்கும் இந்தத் திருத்தலம், புதுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Ⓜ *பரிகாரத்தலம்:* Ⓜ

பொதுவாக மேற்குத் திசை நோக்கி அமைந்த திருத்தலங்கள் தனிச்சிறப்பு கொண்டவை. மக்களின் இடர் நீக்கும் பரிகாரத் தலங்களாக அவை திகழ்கின்றன. பெருங்களூர் வம்சவிருத்தீசுவரர் திருக்கோயிலும் மேற்கு பார்த்து அமைந்துள்ள சிறந்த பரிகாரத்தலம்.

மன்னனே ஆனாலும், மகப்பேறு கிட்டாத ஏக்கம் வாட்டத்தானே செய்யும்? குலோத்துங்க சோழனும் அதற்கு விதிவிலக்கல்ல! இறையருள் ஒன்றே தனக்கு அந்த பாக்கியத்தை வழங்கவல்லது என்பதை உணர்ந்த அவன், தல யாத்திரை மேற்கொண்டான். அப்படி வரும்போது அவன் தங்க நேர்ந்த தலம் - பெருங்களூர்.

அந்த ஊரில் காலடி எடுத்து வைத்த உடனே, அவன் மனசுக்குள் தென்றல் காற்று வருடிய இதம் ஏற்பட்டது. உடல் குளிர்ந்தது. அவன் தங்கியிருந்த மண்டபத்துக்கு அருகிலிருந்த ஒரு குளத்தில் நீராடினான். அப்போது கையில் குழவி போன்ற ஒரு பொருள் தட்டுப்பட்டது. உயிருடன் கொஞ்சும் குழவிக்காக ஏங்கியிருந்தவன் கையில் கல் குழவி!

அது சுயம்புலிங்கம். நீருக்கடியில் கிடைத்த நீலகண்டனின் லிங்க உருவம். அதைப் பார்த்ததுமே, கரங்களால் ஸ்பரிசித்ததுமே ஆனந்த அதிர்ச்சி அவனைத் தாக்கியது. அப்படியே ஆரத்தழுவிக்கொண்டான். அந்தக் கணத்திலேயே தன் மனம் நிறைவு பெற்றதையும், ஓரத்து ஏக்கம் விலகி ஓடியதையும் உணர்ந்தான். அந்த லிங்கத்தை குளக்கரையிலேயே பிரதிஷ்டை செய்து, அழகிய கோயில் ஒன்றை நிர்மாணித்தான். தனக்கு பிள்ளைப் பேறு அளிக்கக்கூடியவர் என்பதை உறுதியாக நம்பி, அவரை வம்சவிருத்தீசுவரர் என்று அழைத்தான்.

அவன் நம்பிக்கை வீண்போகவில்லை. அடுத்த வருடமே அவன் மனைவி அழகிய மகவொன்றை ஈன்றாள். நன்றி சொன்ன மன்னன், ‘என் வம்சம் விளங்கவைத்த ஈசனே, இத்தலத்திற்கு வந்து உமை வணங்குவோர் அனைவரது வம்சமும் தழைக்கப் பேரருள் புரியுங்கள்’ என்று உலக நன்மைக்காகவும் வேண்டிக் கொண்டான்.

🅱 *கோயில் உள்ளே...* 🅱

ஐந்து நிலை ராஜகோபுரத்தை எதிர்நோக்கியுள்ள திருக்குளத்தில் இறங்கி, நம்மை புனிதப்படுத்திக் கொண்டு, வன்னிமரத்து விநாயகரை வணங்கிவிட்டு உள்ளே நுழைகிறோம். கருவறையின் பின்னே கிழக்கு நோக்கி, தனியாக ஒரு கணபதி - ‘சந்நிதி விநாயகர்’ உள்ளார். அவரையும் வணங்கிவிட்டு, பிரதான தலவிநாயகரான க்ஷேம கணபதியை தரிசித்துவிட்டு, குலம் தழைக்க அருள்புரியும் நாதனைக் காண விழைகிறோம்.

Ⓜ *திட்டாணிக்கல்:* Ⓜ

இந்தக் கோயிலில் ஒரு தனிச்சிறப்பு, அங்கே மக்கள் தங்கள் காணிக்கையை செலுத்தும் விதம்தான். அதுதான் *‘திட்டாணிக்கல் நெல் காணிக்கை’*. கருவறை முன்னே அமைந்துள்ள, சதுரமான பட்டிகைக் கல்லை, திட்டாணிக்கல் என அழைக்கிறார்கள். அதைத் தொட்டு வணங்கிவிட்டு உள்ளே சென்று, வம்ச விருத்தீசுவரரை தரிசிக்கிறோம்.

உயர்ந்த அழகிய பாணம். நாகாபரணமும், பெரிய ரோஜா மாலையும், ருத்திராட்சமும், திருநீற்றுப்பட்டையும், அந்த எண்குணத்தீசனுக்கு மேலும் அழகூட்டுகின்றன. ‘நாடிவருவோர் அனைவருக்கும், சிறந்த மக்கட் செல்வத்தைத் தந்து, வம்சம் விளங்கிட அருள்புரிவீர்’ என வேண்டி வணங்குகிறோம். நமக்காக வேண்டிடாமல், பிறருக்காகச் செய்யும் பிரார்த்தனைகளுக்கு பலம் அதிகம்.

மீண்டும் சந்நிதிக்கு வெளியே உள்ள திட்டாணிக்கல் முன் வருகிறோம். அதன் இருபுறமும் பிரார்த்தனை செலுத்திட வந்துள்ள மக்கள், பெண்கள், திட்டாணிக்கல்லின் மேல் தாங்கள் கொண்டுவந்துள்ள நெல்லைக் குவியலாகச் சமர்ப்பித்து வணங்குகிறார்கள்.

குழந்தை பிறந்து, பெயர் வைக்கும் நாளன்று, உறவினர்களுக்கு விதை தானம் என்று நெல் வழங்குவதும், அவர்கள் அதை மடியில் ஏந்திச் செல்வதும் நம் மரபு. அந்த விதை நெல்லைத்தான், குழந்தை வரம் கேட்டு வரும் மக்கள் வம்சவிருத்தீசுவரருக்கு, அந்த வரம் பலிக்கும் முன்பே காணிக்கையாக்குகிறார்கள். அவனது அருட்கருணையில் அத்தனை உறுதியான நம்பிக்கை அவர்களுக்கு!

🅱 *மங்கள நாயகி:* 🅱

பிராகாரத்தைச் சுற்றி வந்து மங்களநாயகி சந்நிதிக்கு வருகிறோம். பொதுவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னை, பிரகதாம்பாள் என்றே பெயர் கொண்டிருப்பாள். இங்கு அம்பிகை மங்கலம் நல்கும் மங்களநாயகியாக அருள்பாலிக்கிறாள். நான்கு கரங்களோடு, அபயவரதக் கோலம். சந்நிதிக்கு வெளியே சுவரில் குலோத்துங்க சோழன், அவனது துணைவியார் சிற்பம்.

வம்சம் தழைக்க வேண்டும் என்ற நியாயமான மனித ஏக்கத்தை இறைவன் புரிந்துகொண்டு இருக்கிறான். மக்களின் அனுசரணைக்கு ஏற்ப, அவர்களது தற்காலத்திய வசதிக்கேற்ப அருள் வழங்கவும் அவன் பல தலங்களில் காத்துக்கொண்டு இருக்கிறான்.

அவனை வணங்குவதால் பயனடைந்து, ஏக்கம் தீர்வது உறுதி.

Ⓜ *வம்சவிருத்திக்கு அருள் பாலிக்கும் மேலும் சில ஆலயங்கள்:* Ⓜ

🅱 *புத்திர காமேஸ்சுவரர்:* 🅱

தசரத மன்னன், பிள்ளை வரம் வேண்டி, குலகுரு வசிஷ்டரின் ஆலோசனையோடு *‘புத்திர காமேஷ்டி யாகம்’* நடத்தினார். புத்திர காமேஷ்டீசுவரர் என்ற திருநாமம் கொண்டு ஈசுவரன் அருள்பாலிக்கும் தலம், ஆரணிக்கு அருகில் உள்ள வெட்டுவாணம். திருச்சிக்கு அருகில் உள்ள உத்தமர்கோயில் திருத்தலத்தில் தசரதலிங்கம் என்ற சிவலிங்கத் திருமேனி உள்ளது. புத்திர காமேஷ்டீசுவரராக ஈசனை மக்கள் அங்கு வழிபடுகிறார்கள். மயிலாடுதுறைக்கு அருகில் திருவாலங்காட்டிலும் புத்திர காமேஷ்டீசுவரர் சந்நிதி உள்ளது.

Ⓜ *முக்தீசுவரர்:* Ⓜ

மக்கள் செல்வத்தைப் பெற்றிடாதவர்கள், மருத்துவரீதியாக பரிகாரம் தேடிடவும் முயற்சிக்கிறார்கள். உடல்ரீதியாக இருக்கும் குறைபாடுகளுக்கு பரிகாரம் தரும் திருத்தலங்களும் நம் மண்ணில் உண்டு. செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் உள்ள ஆத்தூர் திருத்தலத்து முக்தீசுவரர், அபூர்வமான சிவலிங்கத் திருமேனி கொண்டவர்.

*‘சிருஷ்டிலிங்கம்’* சந்தான பரமேசுவரர் என்றழைக்கப்படும் இந்தத் திருமேனி பற்றிய விளக்கம் *‘லிங்கோத்பவர்’* எனும் நூலில் உள்ளது. ஆந்திர மாநிலத்தில் குடிமல்லம் எனும் தலத்திலும் இது போன்ற சந்நிதி உள்ளது. ஆண்களுக்கு உடல்ரீதியாக ஏற்படும் குறைபாடுகளைக் களைவதற்கு, சந்தான பரமேசுவரர் திருமேனி வழிபாடு சிறப்பானது.

🅱 *சந்தான கோபாலன்:* 🅱

வைணவத் தலங்களில் கருவறையில் ‘ஆலிலையில் கண்ணன் தவழ்ந்திருக்கும் கோலத்தில்’ உற்சவத் திருமேனி இருக்கும். உலகே அழியும்போது, ஆலிலைமேல் கண்ணன் குழந்தை வடிவில் தோன்றி, மனித குலம் மீண்டும் தழைக்க அருள்பாலிப்பான் என்பார்கள். சந்தான கோபாலன் திருவுருவை வெள்ளித் தகட்டில் எழுதி, விரதமிருக்கும் வழக்கமும் உண்டு.

மன்னார்குடி, திருச்சேறை, சிறுபுலியூர், கீழச்சாலை, அனந்த மங்கலம், கண்டியூர், கும்பகோணம், திருப்புல்லாணி ஆகிய தலங்களில் சந்தான கோபாலன் திருமேனியை தரிசிக்கலாம்.

குழந்தைச் செல்வம் வாய்க்கப்பெறாத பெண்கள், இந்தத் தலங்களில், கருவறையில் உள்ள சந்தான கோபாலன் உற்சவத் திருமேனியை பட்டாச்சாரியாரிடம் கேட்டு வாங்கி, தங்கள் மடியில் வைத்து, சேலையினால் சுற்றிக்கொண்டு பிரார்த்திப்பதைக் காணலாம். இந்த வழக்கம் எல்லா வைணவத் தலங்களிலும் இன்றும் நடைமுறையில் உண்டு.

பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரம், சந்தான கிருஷ்ண க்ஷேத்திரம் என்றும் இந்தத் தலங்களை அழைப்பார்கள். திருக்கோயிலூரை அடுத்த திருவரங்கத்தில், உறியேந்திய சந்தான கோபாலகிருஷ்ணன் சந்நிதி உள்ளது. அதேபோல வேணுகோபாலன் சந்நிதிகளும் சிறப்பானவை.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
🏹  *தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்*🏹